கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெண் வீட்டார் காரில் கடத்த முயன்ற போது, இருவரும் கதறி அழுது கூச்சல் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22). இவரும் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா (19) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பெண் வீட்டார், இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். 


இதனிடையே கோவை - அவிநாசி சாலையில் உள்ள லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகில் சென்று கொண்டு இருந்த போது, காரில் ஏறிய சிலர் காதல் தம்பதியை கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அச்சத்தில் உறைந்த காதல் தம்பதி, தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாக கதறியழுது கூச்சல் போட்டு காரில் இருந்து இறங்க முயற்சித்தனர். போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்த இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கிருர்ந்த வாகன ஓட்டிகள் காரை வழிமறித்து காரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் இருவரையும் மீட்டு, பந்தய சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 






“நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அதற்கு ஆதாரம் உள்ளது. கத்தி வைத்து மிரட்டினர்” எனக்கூறிய காதல் ஜோடிகள் பெற்றோரிடம் செல்லமாட்டோம் எனக்கூறி போக்குவரத்து காவலர் காலில் விழுந்து கெஞ்சினர். சம்பவ இடத்திற்கு வந்த பந்தய சாலை காவல் துறையினர் காதல் தம்பதி மற்றும் அவர்களை கடத்த முயன்ற பெண்களின் உறவினர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பின்னர் இரு தரப்பினர் இடையேயும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை பெண் வீட்டார் கத்தி முனையில் நிறுத்தி கடத்த முயன்றதை வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. 


மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண