கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. பேரூராட்சியாக இந்த கூடலூர், அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கூடலூர் நகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து கூடலூர் நகராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த அறிவரசு என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி சாதாரணக் கூட்டம் கடந்த 30 ம் தேதியன்று நடைபெற்றது. நகராட்சித் தலைவர் அறிவரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் தீர்மானமாக கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ராணுவம், துணை ராணுவம், சி.ஆர்.பி.எப் வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி கட்ட தேவையில்லை. கடந்த 24 ம் தேதி நடைபெற்ற வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இந்த அறிவிப்பை நகராட்சித் தலைவர் அறிவரசு தெரிவித்தார். இத்தீர்மானத்திற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து, தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இது குறித்து கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு கூறுகையில், “மற்ற பணிகளில் உள்ளவர்கள் அடிக்கடி தங்களது வீடுகளுக்கு வந்து செல்ல முடியும். ஆனால் நாட்டிற்காக எல்லையில் பாடுபடும் ராணுவ வீரர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தங்களது வீடுகளுக்கு வந்து செல்கின்றனர். நாட்டிற்காக கடமை உணர்வோடு இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.
ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் சொத்து வரி, குடிநீர் வரி கட்டத் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டில் முதல் முறையாக ராணுவ வீரர்களுக்கு இந்த திட்டத்தை எங்களது நகராட்சியில் நடைமுறைபடுத்தி இருப்பது மன ரீதியாக மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராணுவ வீரர்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை.
கூடலூர் நகராட்சியில் 25 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர். ராணுவ வீரர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சொத்துவரி, குடிநீர் வரி புத்தகத்தில் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறித்து, சீல் வைத்து தர திட்டமிட்டுள்ளோம். இதேபோல மற்ற பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்