கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர்.


அண்ணாமலை புகார்:


அதில் தி.மு.க.வை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.  கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனிடையே வாக்காளர்கள் பட்டியலில் ஒரு இலட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் பலர் வாக்களிக்க முடியாமல் போனதாகவும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை புகார் தெரிவித்து இருந்தார்.


சமூக வலைதளங்களில் கிண்டல்


இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொதுமக்களாக உருவாக்கிய இயக்கம் People for annamalai என்று கூறி, அந்த அமைப்பினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது கோவை மக்களவை  தொகுதியில் லட்சக்கணக்கானோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாகக் கூறி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் பெரும்பாலான நபர்களின் கைகளில் வாக்களித்ததற்கான அடையாளமாக கை விரல்களில் மை வைக்கப்பட்டு இருந்தது.




பொதுஜனங்கள் உருவாக்கிய அமைப்பு என சொன்னாலும் பா.ஜ.க ஸ்டைலில் ’பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கி, அதே முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என தெரிவித்த அந்த அமைப்பினர், இது பொது மக்களாக உருவாக்கிய அமைப்பு எனவும், இதற்கும் பா.ஜ.கவிற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தனர். வாக்களித்தற்கான அடையாளத்துடன், வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி People for annamalai அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.


மாவட்ட நிர்வாகம் மீது புகார்


இதற்கு முன்னதாக நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் ஒரு இலட்சம் பொதுமக்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறி அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு ஜூன் நான்காம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பீப்பிள்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பை ஏற்படுத்தி, அவருக்காக வாக்கு சேகரித்து வந்ததாக தெரிவித்தார். தாங்கள் வாக்கு சேகரித்த பொதுமக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக தேர்தல்  அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தவர், வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.