கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை அடிவாரத்தில் இன்றைய பரப்புரையை துவங்கினார். மருதமலை அடிவாரத்தில் வழிபாடு செய்த பின்னர், தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். யார் பிரதமராக ஜெயிக்க போகின்றார் என தெரிந்து நடைபெறும் தேர்தல். 2024 -  29 காலம் வளருகின்ற இந்தியா வளர்ந்த இந்தியாவாக மாறப்போகும் காலம்.


இந்த முறை 400 எம்பிகளைத்தாண்டி பாஜக பாராளுமன்றத்தில் அமர வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசியல் காரணங்களுக்காக இதுவரை எடுக்கப்படாத முடிவுகள், இந்த காலத்தில் எடுக்கப்படும். முக்கியமாக நதி நீர் இணைப்பு இந்த காலகட்டத்தில் செய்யப் போகின்றோம். ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி தேவைப்படும். அதை செய்ய போகின்றோம்.


கோவையில் வெற்றி உறுதி


பிரதமருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை. 20 ஆண்டு காலமாக வளர்ச்சி தேங்கிய நிலையில் இருக்கின்றது. இங்கிருத்த எம்பிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாத நிலையில், பிரதமரை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாமல் இருந்திருக்கின்றனர். தேங்கி இருக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 1040 கோடி பணம் கொடுத்தும் கூட அது  முறையாக பயன்படுத்தபடுகின்றதா என தெரியவில்லை. கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.


கோவையில் நம் வெற்றி உறுதி செய்யப்பட்டது, இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். இன்று முதல் 16 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். திமுகவை பற்றி நாம் பேசாத பேச்சில்லை, இன்னும் 16 நாளில் மட்டும் பேசி எதுவும் ஆகப் போவதில்லை. ஓரே ஒரு வண்டி மட்டும் நேரடியாக டெல்லி செல்கின்றது, மற்ற கட்சிகளை பற்றி பேச தயாராக இல்லை. மருதமலை ஐஓபி காலனியில் குப்பை சுத்தகரிப்பு நிலையம் வேண்டும், குப்பையை நீக்கி நகரை சுத்தமாக வைத்திருப்பதில் பின்னோக்கி செல்கிறோம். நகரங்கள் குப்பை மேடாக மாறிக்கொண்டு இருக்கின்றது. அடுத்த 16 நாட்கள் மக்களிடம் நீங்கள்தான் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.




நொய்யலை மீட்டெடுப்போம்


இதையடுத்து சுண்டப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “ஏப்ரல் 19 தேதி வாக்களிக்க வேண்டியது மத்தியில் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல். ஒவ்வொரு பெண்களுக்கும் கழிப்பிடம், வீடு போன்றவை கட்டிகொடுத்தவர் பிரதமர் மோடி. பெண்களுக்கு என்ன வேண்டுமோ அதை பார்த்து பார்த்து செய்ய கூடியவர் பிரதமர் மோடி. கடந்த காலத்தில் நின்று தேர்தலில் இப்பகுதியில் நின்றவர்கள் இன்னும் மக்களுகாக குரல் கொடுத்து பணியாற்றி கொண்டு இருகின்றனர்.  அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணியாற்றுபவர்கள் பா.ஜ.கவினர். இந்த சூழல் மாறவேண்டும்” எனத் தெரிவித்தார்.


பின்னர் பேசிய அண்ணாமலை, “ஏப்ரல் 19 தேதி பிரதமரை வலுப்படுத்த 400 எம்.பிகள் கொடுக்க போகின்றீர்கள். அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் கோவையில் இருந்து போட்டியிடுகின்றேன். மோடி அவர்களுக்கு போடும் வாக்கு அடுத்த தலைமுறைக்கான வாக்கு. இந்த பகுதியில் சித்திரை சாவடி வாய்க்காலில் கழிவுநீர் கலக்கின்றது. 970 கோடி ரூபாய் நொய்யலை சுத்தப்படுத்த பிரதமர் கொடுத்துள்ளார். காய்ந்துபோன மாடு வைக்கப்போரை பார்த்தமாதிரி திமுகவினர் இருப்பார்கள். ஜீவநதியான நொய்யல் நதியை மீட்டெடுப்போம். இன்னும் 16 நாட்கள்தான் இருக்கின்றது. பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.