பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபூர் சர்மா, முகமுது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கருத்திற்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த நவீன் குமார் என்பவரும் கருத்து பதிவிட்டார். முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய இந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு இஸ்லமிய நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து மதங்களை மதிப்பதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஆகியோர் பாஜக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், இந்த சர்ச்சை தீர்ந்தபாடில்லை. இவ்விவகாரத்தில் இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. 


இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் நூபுர் சர்மாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. நூபுர் சர்மாவிற்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நூபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் பாஜக ஆதரவாளர்கள் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.


இந்நிலையில் நூபுர் சர்மாவின் கருத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட கார்த்திக் என்வரை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். 26 வயதான இவர் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிவி அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கருத்துகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கம் செய்துள்ளார். 


இந்நிலையில் கார்த்திக்கின் நடவடிக்கைகளை கவனித்து வந்த கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துவதல், தகவல் தொழில் நுட்பச் சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் காவல் துறையினர் கார்த்திக் மீது வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்றிரவு கார்த்திக்கை கைது செய்த சைபர் கிரைம் காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண