அட்சய திருதியை நாளில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்தால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம், வெள்ளி வைர நகைகளை வாங்குவர். அதன்படி இந்த வருட அட்சய திருதியை நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக நகைகள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமே தனி தான். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என விதவிதமாக ஆபரணங்கள் வாங்குவார்கள். இதனால் நகைக்கடைகள் எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பும். அதேசமயம் மற்ற நாட்களை காட்டிலும் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். அதற்கு காரணம் இந்த நன்னாளில் நாம் ஆபரணங்கள் வாங்கினால் அது ஆண்டு முழுவதும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




நகை வாங்க குவிந்த மக்கள்


அட்சய திரிதியை நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் இன்று காலை முதல் நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படியான நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. அட்சய திரிதியை நாளில் நகைக்கடைகளில் மக்கள் ஆபரணங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்ற நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில், இன்றைய நாளில் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்திலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான நகைக்கடைகள் உள்ளன. இந்த நகை கடைகளில் இன்று மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை முதலே மக்கள் நகைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் சிறப்பு சலுகைகள் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது. அதே சமயம் பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் அனைவரும் குழந்தைகள் உடன் வந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நகைகளை வாங்கி செல்கின்றனர். மேலும் அட்சய திருதியை நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் புதுபுது டிசைன்களில் நகைகள் புதுவரவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் அதிகளவில் நகை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.