கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரனக் கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சியில் அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவிகிதம் அபராதம் என்ற மாநகராட்சியின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா சந்திரசேகர் ஆகியோர்  மேயருக்கு எதிரான பதாகையை கையில் ஏந்தி முழக்கம் எழுப்பியபடியே மாமன்ற அரங்கத்திற்குள் வந்தனர்.




தொடர்ந்து மேயருக்கு எதிரான பதாகையை கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடியே அதிமுக உறுப்பினர்கள் மேயர் இருக்கையின் அருகே சென்று வரி அபராதம் குறித்த தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், மேயர் கல்பனா அதிமுக கவுன்சிலர்களை மாமன்ற கூட்ட அரங்கத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.


இதனையடுத்து கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய அதிமுக கவுன்சிலர்கள் மூவரும் மாமன்ற வளாகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 1 சதவிகிதம் அபராதம் என்ற மாநகராட்சியின் அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் கூறுகையில், ”மேயர் கல்பனா ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 300 கோடி ரூபாய் அளவிற்கு கோவை மாநகராட்சியில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவை மாநகராட்சியில் உள்ள 100  வார்டுகளிலும் எந்த ஒரு புதிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகின்றனர்.


மேயர் கல்பனா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷின் வார்டில் தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்டவரின் புகைப்படத்தை அனுப்பியும், மாநகராட்சி தரப்பில் இதுவரை என்ன என்று கூட கேட்கவில்லை” எனத் தெரிவித்தனர்.


இந்நிலையில் மாமன்ற கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இரண்டு மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உத்தரவிட்டுள்ளார்.