உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலை 06:46 மணிக்கு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:34 மணிக்கு நிறைவடையும் என அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இந்நிலையில் நேற்று மாலை முதலே திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் வர தொடங்கினர், திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த பக்தர்கள் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.


குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் அனைவரும் கிரிவலம் வரும் பக்தர்கள் அளிக்கும் யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடிப்படையாகவும் சாக்காகவும் வைத்து கொண்டு, பெற்ற பிள்ளைகளை வைத்து பெற்றோர்களே பிச்சை எடுத்து வரும் அவல நிலை தற்போது கிரிவலப் பாதையில் அரங்கேறி உள்ளது.


 




ரகசிய தகவல்


சமூக நலத்துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையத்திற்கு பெற்றோர்களே தங்களது குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் இன்று மாலை முதல் காவல் துறையினரின் உதவியுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிரிவலப் பாதையில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.


இந்த சோதனையில் அடிஅடிஅண்ணாமலை, கோசாலை, ராமர்பாதம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களை பிடித்து விசாரித்ததில், தங்களது பெற்றோர்களே தங்களை பிச்சை எடுக்க அழைத்து வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், மோரணம், காட்டுமலையனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளை அடையாளம் கண்டனர். குறிப்பாக கோயமுத்தூர், திருச்சி, மதுரை, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது.




அவர்களிடம் விசாரணை செய்த ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் தங்களது பெற்றோர்களே தங்களை பல்வேறு ஊர்களுக்கு திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும், தற்போது அவர்கள்தான் தங்களை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் அரசு காப்பகத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர், பெற்றோர்களே தங்களது குழந்தைகளை திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.