சிறுவாணி அணையின் நீர், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. மேலும் கடந்த 1973 ஆண்டு முதல் சிறுவாணி நீர் பகிர்வு குறித்து தமிழக கேரளா இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி  மிகாமல் தண்ணீர் வழங்க வேண்டும், மேலும் அணையின் நீர்மட்டத்தை 878.50 மீட்டர் வரை தேக்கி பராமரிக்க வேண்டும். ஆனால் அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 877 ஆக குறைத்துள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பில் 19 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் கோடை காலத்தில் கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. 


கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 1.30 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக 0.484 டிஎம்சி முதல் 1.12 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளது. முழு நீர்தேக்க மட்ட வரையிலான நீர் சேமிப்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் பலமுறை கேரள அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தார். 




அதில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், வழக்கமான அளவு நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். கோவை மாநகராட்சிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சிறுவாணி அணையின் உள்ள வால்வுகள் கூடுதலாக திறக்கப்பட்டது. இதன் மூலம் 6 மணி நேரத்திலேயே சுமார் 12 எம்.எல்.டி நீரானது திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 24 மணி நேரத்திற்கு 20 எம்.எல்.டி மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று சிறுவாணி அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தற்போது குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்பது குறித்து கேரள அதிகாரிகளுடன் பேச உள்ளனர். அதனைத்தொடர்ந்து கூடுதல் நீர் திறப்பு அதற்கான வாய்ப்புகள் உள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை உடனடியாக திறந்து விட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அப்போது கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்தற்காகவும், இரு மாநில ஒப்பந்தப்படி சிறுவாணி அணையில் இருந்து போதிய நீர் வழங்கியமைக்காவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.