தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்த நிலையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடைகள், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால், தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுப்பாடுக்ள் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேற்படி கட்டுப்பாடுகளுக்கு பொது மக்கள் அளித்த முழு ஒத்துழைப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது இருப்பினும் மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுமையாக குறையவில்லை. கோவையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கானது வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கோவையில் தளர்வுகள் அளிக்கப்பட்டவை
அதில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12ஆம் வகுப்புகளும், கல்லூரிகளும் சுழற்சி முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படவும், வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்படவும், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு
கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, எல்லைத் தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை வருகின்ற 25ஆம் தேதி முதல் தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு வரும் கேரள பயணிகள், விமானம், ரயில் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கபட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், கொரோனா கட்டுப்பாடுகளை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.