முகம் தெரிந்த நபர்களால் நடத்தப்படும் போக்சோ குற்றங்களுக்கு அந்நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பாக, கோவை மாவட்ட கண்காணிப்பாளர்  செல்வ நாகரத்தினம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு  எதிராக கடந்த மூன்றரை வருடங்களில் நடந்த குற்றங்களை கணக்கிட்டு அவற்றை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிராக மூன்றரை வருடங்களில் போக்சோ வழக்குகள்  4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 12 முதல் 18 வயது பெண் குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது தொடர்பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகம் தெரிந்த நபரால்  32 வழக்குகளும், 50 குழந்தை திருமணம் வழக்குகளும், போர்னோகிராபி தொடர்பாக  50 வழக்குகளும்  என மொத்தம் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


போக்சோ  தொடர்பாக விழிப்புணர்வு முகாம்களை மாவட்ட காவல் துறை மூலம் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம், துடியலூர், காரமடை ஆகிய பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தாண்டில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. ஆன்லைன் மூலமாக வகுப்பு நேரத்திலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி துறையுடன் இணைந்து செயல்படுகின்றோம். தனியார் பள்ளிகளும் 20 நிமிடம் காவல்துறைக்கு ஒதுக்கி கொடுத்தால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். காவல் துறையின் இந்த முயற்சிக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


4 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட போக்சோ வழக்குகளில், இரண்டாவது பிரிவில் வரும் முகம் தெரிந்தவர்களால் நடத்தப்படும் பாலியல் குற்றம் தொடர்பாக கைது செய்யப்படும் போக்சோ  வழக்குகளில்  கைது செய்யப்படுபவர்கள்  மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.  இனிமேல் முகம் தெரிந்த நபர்களால் நடத்தப்படும் போக்சோ குற்றங்களுக்கு அந்த நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தி குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா காலத்தில் போக்சோ வழக்குகளின்  எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெற்றோர் கண்காணிப்பு இல்லாமல்  குழந்தைகள் வீட்டில் இருந்ததும் போக்சோ  எண்ணிக்கை  உயரக் காரணம். குழந்தைகளை பெற்றோர் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பாக தினசரி அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.