சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழி வகுக்கும் விடியல் பயணம் என்ற மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள், ஏழை, எளிய பெண்களுக்கு பேரூதவியாக இத்திட்டம் அமைந்துள்ளது. ஆனால் இத்திட்டம் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் செயல்படாமல் இருந்து வந்தது.


கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில், தேயிலை தோட்டத் தொழில் முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. மலைப்பாதைகள் என்பதால் அரசுப் பேருந்துகள் மட்டுமே வால்பாறையில் இயங்கி வருகின்றன. ஆனால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தில் ஒரு பேருந்து கூட இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். வால்பாறை பகுதியில் உள்ள 36 வழித்தடங்களிலும் மொஃபுசில் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அரசின் பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டம் சாதாரண டவுன் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இத்திட்டம் இங்கு செயல்படாமல் இருந்தது.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “மலை வாழிடமான வால்பாறையில் 36 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகள் அதிகம் உள்ள இப்பகுதியில்  பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணி மற்றும் பிற இடங்களுக்கு செல்ல அரசு பேருந்து சேவை முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு இயக்கப்படும் பேருந்துகள், எதுவும் சாதாரண பேருந்துகள் இல்லை. இதனால் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் முற்றிலும் செயல்படாமல் உள்ளது. மலைப்பாதையில் சாதாரண டவுன் பஸ்களை இயக்க முடியாது எனக் கூறி, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அமல்படுத்தவில்லை. பேருந்து கட்டணம் என்பது தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருந்து வருகிறது. அரசின் திட்டம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். ஒரு பகுதியில் மட்டும் இத்திட்டம் செயல்படாமல் இருப்பது ஏற்புடையது அல்ல” என தெரிவித்தனர்.




திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பெண்களுக்கான இலவச பயணத்திட்டத்தை வால்பாறையில் செயல்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இதுதொடர்பாக ஏபிபி நாடு முதன் முதலில் செய்தி வெளியிட்ட நிலையில், பல்வேறு தரப்பினரும் வால்பாறையில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வால்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளுக்கும் விடியல் பயணம் என்ற அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வால்பாறை பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக வால்பாறை பகுதியை சேர்ந்த பரமசிவம் கூறுகையில், “திமுக அரசின் முக்கியமான திட்டமான பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் வால்பாறைக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பகுதி மகளிரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசிற்கு நன்றி. இதனால் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் பெண்கள் பயனடைவார்கள். அதேபோல வால்பாறைக்கு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். வால்பாறைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.