தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கலைஞர் நூலகம்


பன்முகத் திறனுடன் கூடிய தொழிற் சூழல், தொழில் முனைவோரின் உற்சாகம், தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், இனிய விருந்தோம்பல் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயம்புத்தூர் மாநகரம். நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணைய வளங்களும் இடம்பெறுவது மட்டுமன்றி விண்வெளி, எந்திரவியல், மெய்நிகர் தோற்றம், இயற்கை அறிவியல் என பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சார்ந்த கண்காட்சிகள் ஏற்படுத்தப்படும். மேலும், புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் திறன் வழங்கிடும் வகையில் ஒரு தொழில் வளர் காப்பகம் ஏற்படுத்தப்படும். அறிவியலைக் கொண்டாடும் இப்புதிய மையம் அறிவுசார் தமிழ்ச் சமூகத்தின் அடையாளச் சின்னமாகத் திகழும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 8,212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தொழில் வளர்ச்சி


நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம். வாழ்வியல் அறிவியல், விண்வெளி பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர்தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு. 20 இலட்சம் சதுரஅடியில், இரண்டு கட்டங்களாக 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும். குறுந்தொழில் முனைவோர்கள் உடனடியாக தொழில் துவங்க 1.2 ஏக்கர் பரப்பளவில் 4 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி ஆயுத்தத் தொழில் வளாகம் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் கட்டப்படும். இதன்மூலம் ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 500 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்வ்வுகள் உருவாக்கப்படும்.




இதேபோல பணி புரியும் மகளிருக்காக தோழி விடுதிகள் கோவையில் அமைக்கப்படும். ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தின் வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு தயாராக ஆறு மாத உறைவிட பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும். நொய்யல் நதியை புனரமைக்க 5 கோடி ரூபாய் செலவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். வால்பாறை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான விடியல் பயணம் என்ற அரசு பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயண திட்டம் அப்பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


தொழில் துறையினர் கருத்து


கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், “பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப பூங்கா, குறிச்சி தொழில் வளாகம் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேசமயம் சிறு, குறு தொழில்களுக்கான மின் கட்டணம் குறைப்பு, கோவையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வட்டச்சாலை, மேம்பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளித்துள்ளது. மத்திய அரசு நிதி கிடைத்த உடன் மெட்ரோ திட்டம் துவங்கப்படும் என்பது கோவையின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.