பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அமித்ஷா தமிழகத்தில் இருந்து தேசிய ஆளுமைகளாக கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் யாரும் வரவில்லை என்ற வருத்தத்தை பதிவு செய்துள்ளார். வரக்கூடியகாலங்களில் தமிழகத்தில் இருந்து கூட பிரதமர் வர முடியும் என்றால், அதற்கான வாய்ப்புகளை வழங்க பாஜக தயாராக இருக்கிறது என்பதை சொல்லியுள்ளார். ஒரு தமிழர் பிரதமராவதற்கான வாய்ப்பு கூட பாஜகவில் இருக்கிறது. ஆனால் திமுக மாதிரி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கட்சியில், முதலமைச்சராக அவரது குடும்பத்தில் இருந்து தான் வர முடியும். அதனால் அவர்களுக்கு இதைப்பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.


அமித்ஷாவிற்கு பிரதமர் மோடி மீது என்ன கோபம் என முதலமைச்சர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அமித்ஷா சொன்னது வரக்கூடிய காலத்தில் தான். அடுத்த தேர்தலில் அல்லது பிரதமர் மோடிக்கு மாற்றாக என்று எல்லாம் சொல்லவில்லை. சொல்லக்கூடிய விஷயத்தின் அர்த்தம் புரியாமல் மேலோட்டமாக பதில் அளித்தது போல தான் இது இருக்கிறது. தமிழகத்தில் தேர்தலில் வெற்றி  பெற முடியவில்லை என்றாலும், பட்டியலினத்தைச் சேர்ந்த எல்.முருகனை மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகவும், மந்திரியாகவும் பாஜக ஆக்கியுள்ளது. தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மத்திய அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு  பிரதிநிதித்துவம் அளித்தால் தான் மந்திரி சபை முழுமையாக இருக்கும் என பாஜக நினைக்கிறது. யாரும் ஜெயிக்கவில்லை என்றாலும், ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவரை மிகப்பெரிய வாய்ப்பாக மத்திய அமைச்சராக்கியுள்ளோம். அதைத்தான் அமித்ஷா தற்போது சொல்கிறார்.  வரக்கூடிய காலத்தில் தமிழகத்தை சேர்ந்தவரும் பாஜகவில் பிரதமராக வாய்ப்பு உள்ளது. கோவையில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த நான் கூட, இந்த கட்சியில் தலைவராக வர முடிந்துள்ளது. பாஜக ஜனநாயக ரீதியாக  திறமை அடிப்படையில் வாய்ப்பு அளித்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.




வருங்காலத்தில் தமிழரில் யார் பிரதமாராக வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு, “காலம் பதில் சொல்லும். நான் இப்போதே இவர் பிரதமராவர், அவர் பிரதமராவர் என சொன்னால் அது சரியாக இருக்காது. சொல்லவும் கூடாது. வரக்கூடிய காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் பிரதமர் நாற்காலியில் அமர வாய்ப்பு வரும். அதைக்கொடுக்க பாஜகவிற்கு மனம் இருக்கிறது. விருப்பம் இருக்கிறது. வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார்? எந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது எங்களது கைகளில் இல்லை.  இது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்” எனப் பதிலளித்தார்.


9 ஆண்டுகளாக பாஜக எந்த சாதனையும் செய்யவில்லை என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “9 ஆண்டுகளாக தொடர்ந்து சொல்லி வருகிறோம். அவருக்கு கேட்க நேரமில்லை. விருப்பம் இல்லை. முதலமைச்சர் கொரோனா பாதிப்பு இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டு ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க மோடி தான் காரணம். முதலமைச்சர் ஸ்டாலினே பிரதமரின் சாதனையின் மிகப்பெரிய பயனாளி தான்” எனப் பதிலளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண