கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன், ரூ.3,167 கோடிக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாநராட்சி கூட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 77 மற்றும் 78 ஆகிய வார்டுகளில் உள்ள 119 பொது குடிநீர் குழாய்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், ”கோவை மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை சூயஸ் பிராஜெக்ட் பிரைவட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 


மாநகராட்சிக்கு உட்பட்ட 77, 78 வார்டுகளில் உள்ள குடிசை மாற்று வாரிய இடத்தில் வீட்டு வசதி வாரியத்தில் குறைவான வருவாய் பிரிவினருக்காக 881 தனிவீடுகளும், 676 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 119 பொது குடிநீர் குழாய்கள் உள்ளன. இந்த பொது குழாய்கள் மூலம் 6095 மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த பொது குழாய்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 இலட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 9 இலட்சத்து 61 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. 




இந்த 119 பொதுக்குழாய்களை பெருமளவு குறைத்து, அப்பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு வீட்டு இணைப்பாக மாற்றி அமைத்தால், குடிநீர் கட்டணத் தொகை மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். இப்பகுதி மக்கள் குறைந்த வருவாய் பிரிவினர் என்பதால், வீடுகளுக்கு குடிநீர் வீட்டு இணைப்புகளுக்கான இணைப்புத் தொகை விலக்களிக்கப்பட்டு, குறைந்தபட்ச கட்டணமாக  250 ரூபாய் செலுத்தினால் வீட்டு இணைப்பு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஏபிபி நாடுவிடம் பேசிய எழுத்தாளர் இரா.முருகவேள், “கோவை மாநகராட்சி தீர்மானம் மூலம் வருமானம் தராத பொதுக்குழாய் இணைப்புகளை வருமானம் தரும் இணைப்புகளாக மாற்றுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு காசு கொடுத்து மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மக்களுக்கு குடிநீர் வழங்கும் அரசின் சேவை, சிறு சலுகை கொடுத்து நிறுத்த பார்க்கிறது. மக்களுக்கான சேவையில் இலாபம், நஷ்டம் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது அரசின் கடமை.




குடிநீர் விற்பனை பண்டமாக மாற்றப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தவில்லை எனில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும். காசு உள்ளவர்களுக்கு மட்டுமே குடிநீர் கிடைக்கும். உயிர் வாழ தேவையான தண்ணீரை விற்பனை பண்டமாக மாற்றுவது நியாயமில்லை. ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். கோவை முழுக்க இத்திட்டம் வந்தால் சாதரண மக்கள் பாதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.




இத்தீர்மானம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் கேட்ட போது, “ஏற்கனவே சூயஸ் வந்தால் பொதுக்குழாய்களை எடுக்க சொல்வது போன்ற  ஆபத்து இருக்கிறது என ஆட்சேபனை தெரிவித்து இருந்தோம். இத்திட்டத்தை அனுமதிக்க கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு. அதிமுக, திமுக அரசுகள் அதே செயலை செய்வது சரியல்ல. இதனை திரும்ப பெற வேண்டும். 2 வார்டுகளில் பரிசோதனை செய்து எல்லா வார்டுகளிலும் அமல்படுத்துவார்கள். சூயஸ் குடிநீர் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வாரியமே தொடர்ந்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண