பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் கோவை காளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்தினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே ஆதார் எண்ணுடன் கூடிய அட்டையை பயன்படுத்த வசதியாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்து செய்து கொள்வதற்கு வசதியாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டம் செயல்பட எல்காட் மூலமாக 770 ஆதார் பதிவு மின்னனு கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் பிறந்த  குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் வரை புதியதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள்   இத்திட்டத்தினை பயன் படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டம் மூலம் பதிவு செய்து அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், அவர்களது பெற்றோரின் வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு ஏற்ப்பாடு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தி தரப்படும். இன்று நான்காவது பெற்றோர் மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. திருப்பூர், நீலகிரி, ஈரோட்டை சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது போன்ற மாநாட்டின் வாயிலாக முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தும் விழிப்புணர்வாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தரப்பு நன்கொடை வழங்கப்பட்டு இருக்கிறது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளிகளுக்கு நன்கொடை கொடுத்ததை போல நிறைய பேர் கொடுக்க முன் வருகின்றனர். நன்கொடை தந்தவர்களை அழைத்து கவுரவிக்கப்படுவதின் வாயிலாக அவர்கள் மகிழ்ச்சி அடைவது எங்களை ஊக்கப்படுத்துகிறது.


இந்த 4 மாவட்டத்தில் மட்டும் இதுவரை அரசு பள்ளிகளுக்கு ரூ. 448 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பல பேர் 1 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை நன்கொடையாக வழங்க பத்திரங்களை கொடுத்து சென்றுள்ளனர். அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 5வது பெற்றோர் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கம் தருவதின் அடிப்படையில், மாநாடு சிறப்பாக நடத்த ஏற்பாடு நடக்கிறது” என்றார். முன்னதாக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.