கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை விரட்டியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. 


கோவை மாவட்டம் மருதமலை மற்றும் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 20 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மாலை நேரத்தில் அருகில் உள்ள கிராமப்பகுதிகளுக்குள் உலா வருகின்றன. மேலும் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.




இந்நிலையில் மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை வடவள்ளி கணுவாய் சாலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாழை தோட்டத்தில் இருந்து வெளியேறிய யானை அதிகாலையில் வனப்பகுதிக்குள் சென்றது. 


இதனிடையே இன்று காலை 6 மணி அளவில் மற்றொரு ஆண் காட்டு யானை கணுவாய் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஆனைகட்டி செல்லும் சாலைக்கு வந்தது. அப்போது யானையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களை திடீரென விரட்டியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் அந்த யானையை மீண்டும் கணுவாய் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் கிராமவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண