கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.


குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை, மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 30 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வீட்டில் வைத்திருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களை சாப்பிடுவது, ஆட்களை தாக்குவது போன்ற சம்பங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.




இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கரடிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றி வரும் ஒற்றை ஆண் காட்டு யானை தனியாக உள்ள வீட்டின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டு வருகிறது. மேலும் அந்த ஒற்றை யானை கீழே தள்ளி விட்டதில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே அந்த ஒற்றை யானை கடந்த சனிக்கிழமை இரவு மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து கோவை வனச்சரத்திற்குட்பட்ட வேடப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவை வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனினும் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை திடீரென மாயமானது. இதனை தொடர்ந்து இன்று காலை பேரூர் தமிழ் கல்லூரி அருகே ஒற்றை காட்டு யானை நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது வனத்துறையினர் தேடி வந்த ஒற்றை யானை அங்கு நிற்பது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பகல் நேரத்தில் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஊர் பகுதியில் காட்டு யானை சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இரவு முழுவதும் வேடப்பட்டி, பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானை தற்போது வழி தவறி வந்து ஊருக்குள் நிற்கிறது. இதனை உடனடியாக வனப் பகுதிக்குள் விரட்டினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மாலை நேரத்தில் இந்த யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் இந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். இதேபகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரியில் இருந்து பிடித்து வரப்பட்ட மக்னா யானை வந்த நிலையில், மீண்டும் காட்டு யானை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.