நலமே சூழ்ந்தது.. வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட காட்டு யானை : குட்டியுடன் சேர்த்து வைக்க முயற்சி..
வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் வனப்பணியாளர்கள் ரோந்து செல்வது வழக்கம்.
Just In




அதன்படி கோவை வன சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து ஒரு யானை பிளிரும் சத்தம் கேட்டு, அந்த பகுதிக்கு சென்ற வனப்பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியில் பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வனப்பணியாளர்கள், மருத்துவரின் உதவியுடன் தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் தண்ணீர் மற்றும் பழங்களும் அந்த யானைக்கு வழங்கப்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் யானைக்கு அருகிலேயே குட்டி யானை பரிதவிப்புடன் நின்று கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியது.
விடுவிக்கப்பட்ட காட்டு யானை
தாய் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே மூன்று நாட்களாக அந்த யானையுடன் இருந்த மூன்று மாதமான குட்டி ஆண் யானை, அப்பகுதியில் இருந்த ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து காட்டிற்குள் சென்றது. கூட்டத்துடன் இணைந்து குட்டி யானை நல்ல முறையில் இருப்பதாகவும், அந்த யானையை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்கள் அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெறும் தாய் யானையை, ஒரு யானைக்கூட்டத்துடன் வந்த குட்டி யானை சந்தித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடனும், சுறுசுறுப்பாகவும் இருந்ததோடு, நன்றாக உணவருந்தி வந்தது. இதனால் இன்று காலை கிரேனில் இருந்து அந்த பெண் யானையை வனத்துறையினர் விடுவித்தனர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, குட்டி யானையுடன் அந்த யானையை சேர்த்து வைக்கவும் வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை வனத்துறையினரின் சிகிச்சையால், மீண்டும் நலமுடன் வனப்பகுதிக்குள் சென்றது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.