கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் மகேஷ்வரன். இவர் அப்பகுதியில் சுபா என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த நூலகம் வீட்டில் படிக்க முடியாதவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவிக்கரமாக இயங்கி வருகிறது. 


மருத்துவ உதவிகள் மட்டுமின்றி பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வரும் மருத்துவர் மகேஷ்வரன், ஆண்டுதோறும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி பயில உதவி வருகிறார். அண்மையில் மருத்துவத் துறையில் 28 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மருத்துவர் மகேஷ்வரனுக்கு, அவரிடம் சிகிச்சை பெற்ற மாணவர் ஒருவர் அவரது உருவப்படத்தை கோட்டோவியமாக வரைந்து பரிசளித்து நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.


நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர்கள் நல்லமுத்து - மகேஷ்வரி தம்பதியினர். இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களது மூத்த மகன் ரெனோ அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு காரணமாக, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சுபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த போது ரெனோவொன் உடல் நிலை தேறிய நிலையில், மருத்துவர் மகேஷ்வரன் 10 புத்தகங்களை ரெனோவிற்கு வாசிக்க கொடுத்துள்ளார். அதில் 6 புத்தகங்களை ரெனோ வாசித்து முடித்துள்ளார். மருத்துவமனையில் இருந்து ரெனோ குணமடைந்து வீடு திரும்பும் நாளான்று, மருத்துவர் மகேஷ்வரன் தனது முகநூலில் மருத்துவத் துறையில் 28ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என பதிவினை போட்டுள்ளார். 


இதனைக் கவனித்த மாணவர் ரெனோ மருத்துவர் மகேஷ்வரனுக்கு ஒரு பரிசு அளிக்க முடிவு செய்துள்ளார். ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட ரெனோ மருத்துவர் மகேஷ்வரனை கோட்டோவியமாக வரைய முடிவு செய்துள்ளார். அதன்படி மருத்துவர் மகேஷ்வரன் உருவப்படத்தை கோட்டோவியமாக வரைந்து, அவருக்கு பரிசளித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மருத்துவர் மகேஷ்வரன் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.




இதுகுறித்து மருத்துவர் மகேஷ்வரன் கூறுகையில், “வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் மருத்துவமனையின் முதல் தளத்தில் நூலகம் நடத்தி வருகிறோம். சிகிச்சைக்கு வரும் சிறுவர், சிறுமிகள் வாசிக்க குழந்தைகளுக்கான புத்தகங்களை கொடுப்பது வழக்கம். அப்படி ரெனோவிற்கும் புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தேன்.  மருத்துவத் துறையில் 27 ஆண்டுகளை நிறைவு செய்து 28ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என்ற முகநூல் பதிவினைப் பார்த்து ரெனோ, எனது முகத்தை கோட்டோவியமாக வரைந்து பரிசளித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. மருத்துவராக மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.


10 ஆயிரம் புத்தகங்களுடன் துவங்கப்பட்ட இந்த நூலகத்தினை, தற்போது 20 ஆயிரம் புத்தகங்களாக விரிவுபடுத்தியுள்ளோம். போட்டித் தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்டவை தொடர்பான புத்தகங்களும் மாணவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை பயன்படுத்திய மாணவர்கள் பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு சென்றுள்ளனர். வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ஒரு இலக்கிய நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண