கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி.ஐ.எஸ்.எல். என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பபிஷா என்ற 18 வயது மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் அந்த கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் சக மாணவிகளுடன் தங்கியிருந்து படித்து வந்தார்.


இந்த நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே குதித்ததில் படுகாயமடைந்த மாணவி பபிஷாவை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பபிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்த சம்பவம் குறித்து விடுதி வார்டன் மஞ்சுளா என்பவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விடுதியில் இருந்த சக மாணவிகளிடம் விசாரித்த போது நேற்று காலையில் ஒருவருடன் பபிஷா பேசிக் கொண்டிருந்ததுன். பின்னர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயன்றததும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மாணவர் மர்ம மரணம்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் என்பவர் கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். விடுமுறை நாளான நேற்று விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர் தனுஷ் சக மாணவர்களுடன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைதானத்திலிருந்து விடுதியின் கழிவறைக்கு மாணவர் சென்ற போது, திடீரென அங்கு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலைப்பகுதியில் மாணவர் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்  மயக்கம் அடைந்த தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறவே மாணவரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


கோவை அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர் தனுஷ் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்கவில்லை எனவும் மாணவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


கல்லூரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை எனவும், மாணவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கே நீண்ட நேரம் ஆகிவிட்டதாகவும், அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிற்காக அழைத்துச் சென்ற நிலையில், மாணவரின் உயிர் பிரிந்து விட்டதாகவும், கல்லூரியில் சிறப்பாக படிக்கக்கூடிய மாணவன் தனுஷ் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். கல்லூரியில் வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்த குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)