கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து கோவை பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் ரவுடி பார்த்தசாரதியை கைது செய்ய முற்பட்டனர். அப்போது அப்பகுதி வழியே காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார். அப்போது காவல் துறையினரும் அவரை விரட்டி சென்ற நிலையில், ரத்தினபுரி அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து பார்த்தசாரதி கீழே குதித்து தப்ப முயன்றனார். அதில் கீழே விழுந்து அடிபட்டதன் காரணமாக காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்த ரவுடி பார்த்தசாரதியை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பார்த்தசாரதியை காவல் துறையினர் அனுமதித்துள்ளனர்.


கோவை நீதிமன்றம் அருகே கடந்த பிப்ரவரி 13 ம் தேதி பட்டப்பகலில் கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


காயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.


இந்நிலையில் கொலை குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலகிரியில் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் என்பதும், அவர்கள் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். 


அப்போது மேட்டுப்பாளையம் வன கல்லூரி முன்பாக கெளதம், ஜோஸ்வா ஆகியோர் திடீரென வாந்தி, தலை சுற்றுதல் ஏற்படுவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென வற்புறுத்தி வாகனத்தை நிறுத்தி இருவரும் தப்பிச் செல்ல முயன்றதாகவும், காவலர்கள் அவர்களை விரட்டும்போது ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஒரு காவலரை தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக இருவரையும் காலில் துப்பாக்கியால் எஸ்.ஐ. சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே 13 பேரை காவல் துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.