கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் திமுக மாணவரணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றிய மாநில உரிமை மீட்பு தீர்மானங்களை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு செல்வது,  தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் அதை கொண்டு வந்த பாஜக அரசை நிராகரிப்போம், இட ஒதுக்கீடு முறையை சதி செயல் மூலம் அழிக்க நினைக்கும் யு.ஜி.சி.க்கு கடும் கண்டனம் தெரிவிப்பது  உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இதில் திமுக துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர் பேசுகையில், “மாணவரணி தமிழ் சமுதாயத்தை ஒரு அறிவுள்ள சமுதாயமாக்கும் வேலையை செய்து வருகின்றார்கள். திமுகவின் பொதுக்கூட்டங்கள் மாலை நேர பல்கலைக்கழகங்கள் என அன்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த வயதில் தான் எதையும் பார்க்காத உணர்வு வரும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு திராவிடம் என்ற பணியை நெஞ்சிலே விதைக்கப் போகின்றீர்கள. அப்படிப்பட்ட மகத்தான பணி மாணவரணி. திமுகவில் மாணவரணி அமைப்பாளர் என்றால் அது ஜில்லா கலெக்டருக்கு சமம். துணை அமைப்பாளர் என்றால் சப் கலெக்டருக்கு சமம். ஆனால் அதற்கான தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது பண்பாடு திராவிட பண்பாடு. வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை மிக்கது திருக்குறள்.




சுயநலமும், பொதுநலமும் கலந்ததுதான் அரசியல் வாழ்க்கை. உங்களை தகுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மொழிக்கு, இனத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என கடைசி வரை இருக்க வேண்டும். அப்போது பணியாற்றும்போது உங்களுக்கு வந்து சேரும் பதவி கூடுதல் அடையாளம். நான் சட்டமன்ற உறுப்பினராக என்னைக்காகவது வந்து விடுவேன், வர வேண்டும் என இருப்பது திமுக அல்ல. ஆனால் உங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. உங்கள் தனிமனித வாழ்க்கையிலும் என்ன வேண்டுமோ அதையும் செய்ய நாங்கள் தயார்.


ஏனென்றால் நீங்கள் ஆராக்கியமாக, நன்றாக இருந்தால் தான் நீங்கள் உழைக்க முடியும். உங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள், சமூகத்தை பார்த்துக் கொள்ளுங்கள், தமிழையும் பார்த்துக் கொள்ளுங்கள்.


திராவிடம் என்றால், சுய மரியாதை, சமத்துவம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி ஆகிய ஐந்தும் தான் திராவிடம் என முதல்வர் தெளிவாக சொல்லியுள்ளார். திராவிடத் தத்துவம் தான் மோடிக்கு எதிராக, இந்தியாவை காப்பாற்றுக்கின்ற ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருக்க போகின்றது என்பதை வட நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார்கள். உங்களுக்கு ஆர்எஸ்எஸ், பாசிய பாஜகவை எதிர்க்கின்றவர்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு அறிவோம் திராவிடம் என்ற நூல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, உணர்வோம் திராவிடம் அடுத்ததாக காப்போம் திராவிடம் என்ற நூலை வழங்க உள்ளோம். இதை நீங்கள் படித்து முடித்தீர்களே ஆனால், தமிழ்நாடை காப்பாற்றக்கூடிய வல்லமையை இளைஞர்களாகிய நீங்கள், மாணவர்கள் பெற்று விடுவார்கள்” எனத் தெரிவித்தார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில், கலந்துகொண்ட அனைவருக்கும் அறிவோம் - திராவிடம் என்ற நூல் வழங்கப்பட்டது.