கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் போலீஸ் எனக்கூறி பணம் கொடுத்தால் மது விற்பனை செய்யலாம் என பணம் பறிக்க முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் - கொச்சின் புறவழிச்சாலை பகுதியில் பல்வேறு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் சில உணவகங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக அந்த உணவகங்களில் மது விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னப்ப செட்டி புதூரில் உள்ள உழவன் ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தை மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இதேபோல காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் என்ற உணவகத்தை துரைசாமி என்பவர் நடத்தி வருகிறார்.


இந்த நிலையில் உழவன் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மூர்த்தி மற்றும் கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமியிம், ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் என்று கூறி பேசியுள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் பணம் ஜி பே மூலம் கொடுத்தால், உணவகங்களில் மது விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமி, அந்த நபரை நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் அந்த நவர் காடுவெட்டி பாளையம் நான்கு ரோடு சந்திப்புக்கு வரச் சொல்லியுள்ளார். இதன் பேரில் அந்த பகுதிக்கு வந்த கொக்கரக்கோ ரெஸ்டாரன்ட் உரிமையாளர் துரைசாமியை, அந்த நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த துரைசாமி அந்த நபரை பிடித்து வைத்துக் கொண்டு, கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.


இதையடுத்து அங்கு சென்ற கருமத்தம்பட்டி காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர் அன்னூர் அருகே உள்ள நீல கவுண்டன் புதூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சேகர் (31)  என்பதும், போலீஸ் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து துரைசாமி அளித்த புகாரின் பேரில் சேகர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். போலீஸ் எனக்கூறி மது விற்பனை செய்யலாம் என பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.