நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வனவிலங்குகள் தாக்குவதால் பொதுமக்கள் காயமடைந்து வந்தனர்.


நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமத்தில் கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம் இயற்கை உபாதை கழிக்க சென்ற 3 பெண்கள் சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்ட சரிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.




இதையடுத்து மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நான்சி என்ற 3 வயது சிறுமியை திடீரென தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. உடனே தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின்பு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகன மூலம் கொண்டு செல்லப்பட்டார்.


அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சிறுத்தையின் தாக்குதல் காரணமாக ஏற்கனவே ஒரு பழங்குடியின பெண் உயிரிழந்த நிலையில், இன்று இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள அச்சம் அடைந்தனர்.


அப்பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரியும், சிறுத்தையை சுட்டுக் கொல்ல கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். நேற்றும், இன்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுத்தை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கி முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். இதேபோல உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.




இதனிடையே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஆறு கூண்டுகளை அமைத்தனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க இரண்டு வனக் கால்நடை மருத்துவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள கிராமப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தனர்.


இந்நிலையில் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் இருந்த சிறுத்தையை வன கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து சிறுத்தை வலை போட்டு பிடித்து கூண்டில் அடைக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட சிறுத்தையை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.