திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (63). அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான  தோட்டத்தில் சோளத்தட்டு பயிரிட்டு இருந்தார். அந்த சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இப்பணியில் வரதராஜன் மற்றும் விவசாய கூலித் தொழிலாளியான மாறன் (66) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் இருவரும் சோளத்தட்டு  அறுவடை செய்யும் பணிகளை மேற்கொண்டு இருந்தனர். அப்போது சோளக்காட்டுக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை,  வரதராஜனை தாக்கியது. இதில் அவரின்  தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாறன் சத்தம் போட்டார். உடனே சிறுத்தை மாறனை தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கியது. இதில் அவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 


இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதில் சிலர் சிறுத்தையை  தேடி சோளக்காட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த சிறுத்தை மேலும் இருவரை தாக்கியதில் காயமடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும், அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவல் அறிந்த திருப்பூர் கோட்ட வனச்சரகத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து  சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  



இதனிடையே சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது கவச உடை அணிந்தபடி சோளக் காட்டிற்குள் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென சோளக்காட்டிற்குள் இருந்து சிறுத்தை பாய்ந்து வந்து வன ஊழியரை தாக்க முயன்றது. அதில் வன ஊழியர் தப்பிக்கும் பரபரப்பு காட்சிகள் ட்ரோன் கேமராவில் பதிவாகியது. சிறுத்தை தாக்குதலில் அடுத்தடுத்து 5 பேர் காயமடைந்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். 


இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”சிறுத்தை பதுங்கியுள்ள கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வழிதவறி இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து இருக்கலாம். இந்த சிறுத்தையை பிடிக்க கோவையிலிருந்து 2 கூண்டுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையை கண்காணித்து வருகிறோம். மாலை மற்றும் இரவு அதிகாலை நேரங்களில் பொது மக்கள் தனியே நடமாட வேண்டாம். அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் கும்கி யானைகளை ஈடுபடுத்தவும், கூடுதல் வன ஊழியர்களை ஈடுபட்டதவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.