நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலில் காயத்துடன் ஐந்து நாட்களுக்கு மேல் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறை வைத்து கூண்டில் பிடிபட்டது.


மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமான இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூர் அருகே அடர் வனப்பகுதிகளும், முதுமலை புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன. அவ்வப்போது இந்த விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதேபோல கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் தேடி உலா வரும் காட்டு யானைகள் சில சமயங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதும், சகதிக்குள் சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக காலில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இரு இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு தேவர் சோலை அருகே உள்ள தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதியில் வைத்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சிறுத்தை பிடிபட்ட தேவன் எஸ்டேட் அஞ்சு கோயில் பகுதிக்கு சென்று பிடிபட்ட சிறுத்தைக்கு சிகிச்சை அளித்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.