தமிழ்நாட்டில் இருளர், காட்டு நாய்க்கர், மலையாளி உள்ளிட்ட 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் காடர், மலை மலசர், முதுவார் உள்ளிட்ட 13 பழங்குடியின இனங்களின் மொத்த மக்கள் தொகை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.


ஒவ்வொரு பழங்குடியினரும் ஒரு தனித்துவமான மொழியை பேச்சு வழக்கில் கொண்டுள்ளனர். பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. அந்த மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருப்பதாலும், எழுத்து வடிவில் இல்லாததாலும் அம்மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. மேலும் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடப்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிவுக்கு காரணமாக உள்ளன.




நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விழிம்பில் உள்ள பழங்குடியினர் மொழிகளை பாதுகாக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், பழங்குடியின செயற்பாட்டாளர்கள் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்துமொழிப்பெட்டிஎன்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.


இந்தப் பள்ளியில் குறும்பர் மற்றும் இருளர் பழங்குடியின மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். இந்த மொழிப்பெட்டியில் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களது மொழியில் இருந்து ஒரு வார்த்தையை தெரிந்து கொண்டு, இரு காகிதத்தாளில் எழுதிக் கொண்டு வந்து அவரவர் பெயரெழுதி போட வேண்டும். மாதமொரு முறை ஆசிரியர் அல்லது பழங்குடி இளைஞர்கள் அப்பெட்டியை திறந்து, அதிகமாக வார்த்தைகளை எழுதிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஆண்டு இறுதியில் இருளா, குரும்பா மொழிகளுக்கென அகராதிகள் குழந்தைகள் பெயரில் அச்சுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.




இதுகுறித்து பழங்குடியின செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஒடியன் லட்சுமணன் கூறுகையில், “வாழ்க்கைச் சூழல் மாற்றம், எழுத்து வழக்கில் இல்லாதது, வணிக மொழியாக இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பழங்குடியின மொழிகள் அழிந்து வருகின்றன. பெரும்பாலான குழந்தைகள் தங்களது மொழியில் உள்ள பல வார்த்தைகளை மறந்து விட்டனர். பலர் பழங்குடியினர் மொழிகளில் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்த சூழலில் அம்மொழிகளை காக்கும் ஒரு கருவியாக மொழிப்பெட்டி, தமிழ்நாட்டில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.


இதனால் பல பழைய வார்த்தைகள் கிடைக்கும். பல புதிய வார்த்தைகள் தெரியவரும். அதன் மூலம் பழங்குடியின மொழி அகராதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதேபோல காட்டு நாய்க்கர், பணியர், பெட்ட குறும்பர், கோத்தர், தோடர் மொழிகளுக்கும் மொழிப்பெட்டி செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.




ஒரு பழங்குடியினர் மொழி அழியும் போது, அப்பழங்குடிகளின் அடையாளம், பண்பாடும் சேர்ந்து அழியும். வனத்திற்கும், அவர்களுக்குமான தொடர்பு அந்நியமாகும். அதனைப் போக்க பழங்குடியின குழந்தைகள் கதைச் சொல்லும் நூலால் எழுவோம் என்ற நிகழ்வை நடத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக பழங்குடியினர் மொழிகளில் நூல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம்என அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ”பழங்குடியின குழந்தைகள் வீட்டில் ஒரு மொழியை பேசிப்பழகியிருக்கும் சூழலில், பள்ளிகளில் ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலத்தில் படிக்க இயல்பாகவே சிரமம் ஏற்படுகிறது. இத்தகைய சிரமங்களை போக்க பழங்குடியின மாணவர்கள் அதிகளவில் படிக்கும் பள்ளிகளில் பழங்குடியின ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பழங்குடியின மொழிகளை பாதுகாக்க அரசு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண