தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.




கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால், கணபதி, பீளமேடு, லட்சுமி மில், ராமநாதபுரம், சிங்காநல்லூர், வெள்ளலூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தாழ்வான சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நேற்று வால்பாறை பிஏபி பகுதியில் 7.3 செ.மீ. மழையும், வால்பாறை தாலுக்காவில் 6.9 செ.மீ. மழையும், வேளாண் பல்கலைக்கழக பகுதியில் 5.9 செ.மீ. மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 5.5 செ.மீ. மழையும் பதிவானது.




கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், மழைக் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் இரயில்வே மேம்பாலத்தின் அடியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேபோல உப்பிலிபாளையம் அவிநாசி சாலை மேம்பாலத்தில் இரயில்வே பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் அடியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.




இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் மீண்டும் கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.


அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் மூன்றாவது முறையாக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.




மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்படுவதாகவும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதும், மீண்டும் சீரமைப்பதும் என தொடர்ந்து செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண