கோவை: நொய்யல் ஆற்று வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளலூர் பகுதி தரைப்பாலம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சேதமடைந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

Continues below advertisement


நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்றான வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.


இதனிடையே கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் வானக போக்குவதரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.. தொடர்ந்து நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.. பின்னர் தரைமட்ட பாலம் உயர்த்தி புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டதை தொடர்ந்து, வாகனங்கள் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட தரைப்பாலமும் வெள்ளத்தில் சேதமடைந்து இருப்பதால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைந்து உயர்மட்ட பால கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola