உயிரிழப்பவர்களுக்கு உற்றார், உறவினர்கள் துணை இருப்பின், அவர்களது இறுதி மரியாதை உரிய முறையில் நடைபெறும். அதேசமயம், அனைவராலும் கைவிடப்பட்டு, பெயர், முகவரி தெரியாமல் உயிரிழப்பவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. அத்தகைய ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் மனிதநேய சேவையில் பல தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கோவையில் பெண் காவலர் அமினா, ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்து தனது கடமையை சமுதாயத்திற்கான சேவையாக மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார்.




கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பெண் காவலராக எம்.அமினா என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் அக்காவல் நிலையத்தில்  பதிவாகும் மரணம் தொடர்பான வழக்குகளில் பிரேத பரிசோதனை நடைமுறைகள், பிரேத பரிசோதனை சான்றிதழ்கள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ-சட்ட செயல்முறைகளைப் பெறும் பணியை செய்து வருகிறார். 




வழக்கமாக காவல் நிலையங்களில் பதிவாகும் கொலை, தற்கொலை உள்ளிட்ட மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, உடற்கூராய்வு முக்கியம். அதேசமயம் உடற்கூராய்வு தொடர்பான பணியை செய்வது என்பது மிகவும் கடினமான பணியாக இருந்து வருகிறது. இதனால் அப்பணி செய்ய பலரும் மறுப்பு தெரிவிக்கும் சூழலில், அமினா மன உறுதியுடன் அப்பணிகளை துணிந்து செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்வதற்கும் தனது நேரத்தைச் செலவிடுகிறார். ஜீவ சாந்தி அறக்கட்டளை உடன் இணைந்து காவலர் அமினா இப்பணிகளை செய்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட, அவர் இப்பணிகளை இடைநிறுத்தாமல் துணிந்து செய்துள்ளார். 




இது குறித்து பெண் காவலர் அமினா கூறுகையில், “வழக்கமாக  பிரேத பரிசோதனைகள் மேட்டுப்பாளையம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் நடைபெறும். இதற்கான எனது பெரும்பாலான நேரங்களை அங்கு செலவிட நேரிடும். பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம். அதேசமயம் ஒருவர் உரிமை கோரப்படாமல் இறந்த போது அது மனவேதனை அளிக்கிறது. அவர்களது இறுதிச் சடங்குகள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக ஜீவ சாந்தி அறக்கட்டளையுடன் இணைந்து நான் செய்து வருகிறேன். இதனை எனது பணியாக தான் நான் பார்க்கிறேன். இது என்னால் முடிந்த சிறு நல்ல காரியம்” எனத் தெரிவித்தார்.




கடந்த 2009 ம் ஆண்டில் அமினா தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், காவலர் பணிக்கான எழுத்துத் தேர்விலும், உடற்தகுதி தேர்விலும் வெற்றி பெற்றார். பின்னர் காவலர் பணிக்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பட்டாலியனில் பணி நியமனம் பெற்றார். பின்னர் 2016 ம் ஆண்டு வரை மாவட்ட ஆயுதப் படை பிரிவில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் உதவி எழுத்தாளராக அமினா நியமிக்கப்பட்டார். அங்கு அவர் மருத்துவ - சட்ட வழக்குகளை கவனிக்கும் காவலராக பணிபுரிகிறார். 


ஜீவ சாந்தி அறக்கட்டளையினர், குடும்பத்தினர் மற்றும் சக காவல் துறையினர் ஒத்துழைப்பு உடன் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 5 ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத உடல்களை தகனம் செய்ய அமினா ஏற்பாடு செய்துள்ளார். இப்பணிகளுக்கு தனது ஊதியத்தில் இருந்தும், மற்ற காவல் துறை அதிகாரிகளின் பங்களிப்புடனும் செலவு செய்து வருகிறார்.




தனது பணியை சேவையாக செய்து வரும் பெண் காவலர் அமினாவிற்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் அண்மையில் டிஜிபி சைலேந்திர பாபு, காவலர் அமினாவின் சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேசிய அமினா, “நான் ஒரு அடிமட்ட காவலர். எனது பணிக்காக டிஜிபி அவர்களிடம் இருந்து பாராட்டு பெற்றது பெருமையாகவும், சந்தோசமாகவும் உள்ளது.” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண