கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. உக்கடம், கரும்புகடை, செல்வபுரம், சிங்காநல்லூர், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. உக்கடம் பகுதியில் சாலையே தெரியாத அளவிற்கு மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர். அதே வேளையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்த மழை நீர் நீர் வீழ்ச்சிகள் போல் காட்சியளித்தது. 




இதேபோல செல்வபுரம் பகுதியில் மழை காரணமாக சாலையில் நீர் தேங்கியது. இதன் காரணமாக சாலையில் வாகனங்களில்  பயணித்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சலீவன் வீதியில் மழை நீர் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள லங்கா கார்னர் பகுதியில் இரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் பாலத்தின் அடியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றினர். 


இந்நிலையில் ரத்தினபுரி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது ஐசக் வீதியில் டேனியல் என்ற ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு சொந்தமான காலியான இடத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் இறங்கியது. இதனால் மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்ட பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் விரைந்த தீயணைப்புத் துறையினர்  தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம் நல்வாய்ப்பாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நெருக்கமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் மின்னல் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனிடையே பலத்த சத்தம் மற்றும் தீப்பொறியுடன் மின்னல் விழுந்ததையும், அதனால் தென்னை மரம் தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண