கோவை அருகே அந்தமானில் மட்டுமே கிடைக்கக்கூடிய சிவப்பு நிற பவளப் பாறைகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையம் பகுதியில் பவளப் பாறைகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் மதுக்கரை வனச்சரக அலுவலர் சந்தியா தலைமையிலான குழுவினர் தீத்திப்பாளையம் கிராமம், கோவை கொண்டாட்டம் தீம் பார்க் அருகில் செயல்பட்டு வந்த ஜெ.ஆர். காய்ன்ஸ் அண்ட் ஜெம்ஸ் என்ற பழமையான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு பழமையான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்களுடன், சிவப்பு நிறப் பவளப்பாறைகளை விற்பனைக்கு கடையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட 4 பவளப் பாறைகள் மற்றும் பவள பாறைகளை கொண்டு செய்யப்பட்ட 2 மாலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பவளப் பாறைகள் அந்தமானில் மட்டுமே கிடைக்கக்கூடியவை.
1972ம் வருட வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின்படி வாங்க, விற்க, இருப்பில் வைத்திருக்க சிவப்பு நிற பவளப் பாறைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அக்கடையின் உரிமையாளரான வேடப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாம்சன் செல்வகுமார் (43) என்பவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகிலேயே அந்தமானில் மட்டும் கிடைக்கக்கூடிய இந்த பவளப்பாறையின் விலை ஒரு கிராம் ரூ.2,500 ஆகும். இந்த பவளப் பாறை சாம்சனுக்கு எவ்வாறு கிடைத்தது, அவர் யாரிடம் வாங்கினார். இதற்கு முன்பு இது போன்று பவளப் பாறைகளை அவர் விற்பனை செய்து உள்ளாரா, எத்தனை ரூபாய்க்கு வாங்கி அவர் விற்றார், அவருடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவளப் பாறைகள் என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. சுற்றுப் புறச் சூழல்களால் ஏற்படும் மாற்றங்களால் பவளப் பாறைகள் அழிவை எதிர்நோக்கியுள்ளன. புவி வெப்பமயமாவதன் விளைவுகளால் ஏற்படும் கடல் நீரின் வெப்பநிலை உயர்வு, கடல் நீரில் அமிலத்தன்மை அதிகரித்தல், மனிதர்களால் கடல் நீர் மாசுபடுதல், மீன் பிடித்தல் உள்ளிட்டவை காரணமாக ஏற்படும் உயிரினச் சமச்சீர் தன்மையில் ஏற்படும் மாறுபாடு, வண்டல் படிவு, ஆகியவற்றால் பவளப் பாறைகளில் உள்ள தொகுப்புயிரிகள் அழிந்து வருகின்றன.
இதனால் அரிய வகை பவளப் பாறைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதும், அவ்வப்போது வனத்துறையினர் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்