நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அதிகளவில் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், ஒரு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஃபோலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 50 வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி உருது பள்ளியில் குழந்தைகளிடம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது.


அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு மாணவியும் என்னால் தான் முடியும் என்று மாறி மாறி பேசியதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் யாரால் முடியும் என்பதை நிரூபித்து காட்டிவிடலாம் என்று கூறி, மாத்திரைகளை சாக்லேட் சாப்பிடுவது போல் தொடர்ந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மாத்திரை செயல்பட தொடங்கியதால் மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையில் மயங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.


இதைத் தொடர்ந்து உடனடியாக மாணவிகளை மீட்டு உதகை அரசு மருததுவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு பேரின் உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அதில் மூன்று மாணவிகளின் உடல்நிலை சீராகி வந்துள்ளது. ஆனால் 13 வயதுடைய ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் மோசமாகி கொண்டே சென்றதுள்ளது. இதனால் அம்மாணவியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.


பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை மாணவியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சேலம் அருகே சென்றபோது மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் குமாராப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மாணவி அழைத்து செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவிக்கு கல்லீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த விசாரணையின் அடிப்படையில் முதல் கட்டமாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண