கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பாப்பநாய்க்கன்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு அப்பால், திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் வெயில் காரணமாக சாமியானா அமைத்து பூத் கமிட்டியினர் அமர்ந்திருந்தனர். அவர்கள் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரி பார்த்தல் மற்றும் பூத் ஸ்லிப் வழங்குதால் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் திமுகவினர் பூத் ஸ்லிப் வழங்கும் இடத்தில் அதிக அளவிலான வாக்காளர்கள் குவிந்திருந்தனர். இது குறித்து பாஜகவினர் காவல் துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மாநகர காவல் உதவி ஆணையாளர் நவீன் கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பி.என்.புதூர் திமுக பகுதி கழகச் செயலாளர் பாக்யராஜ் என்பவர், காவல் துறையினரை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பாக்யராஜை தாக்கி குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.
கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 225 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ராணுவத் துறையினர் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.