தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளவர் யுவன் சங்கர் ராஜா. பிரபல இசையமைப்பாளரான இவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இவரது இசை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிவது வழக்கம்.
கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் எஸ்.என்.எஸ் என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜவின் இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல யூட்யூப் சேனல் குழுவினரின் கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி என்ற விளம்பரம் செய்தார். இதனைப் பார்த்து இந்நிகழ்ச்சியை காண்பதற்காக பல்வேறு கல்லூரிகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதன் பின்பும் அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்ததால் உள்ளே அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரியின் மெயின் வாசல் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேட் மற்றும் சுவரின் அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயன்ற போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதனிடையே கூட்ட நெரிசல் காரணமாக ஒருவரை ஒருவர் விழுந்த நிலையில், அவர்களை ஏறி மிதித்துக் கொண்டு சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். இதில் ஐஸ்வர்யா, நந்தினி, ஹரிணி என்ற மூன்று மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் மூவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மாலையில் மீண்டும் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்தபோது தடையை மீறி மாணவர்கள் உள்ளே சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த சரவணம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிலோமினா கீழே விழுந்தார். அவர் மீது மாணவர்கள் ஏறிச் சென்றனர். இதில் அவர் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்து காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்தும் மாலையில் மீண்டும் கல்லூரிக்குள் யுவன் சங்கர் ராஜாவை பார்ப்பதற்காக மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடியதால் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் மாணவன் உட்பட மூன்று பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களையும் காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக காவல் துறையில் அனுமதி வாங்கவில்லை ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியில் ஒன்று கூடுவார்கள் என தெரிந்தும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் சரி செய்யப்படவில்லை. தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்