கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 445 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை 2851 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 495 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 6 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2069 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளை பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 349 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 375 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை விட ஈரோட்டில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 4 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 90815 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 85081 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 607 ஆகவும் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 225 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 274 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 83579 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81214 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 773 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 42 பேர் குணமடைந்துள்ள நிலையில், 827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஆறு நாட்களாக உயிரிழப்புகள் பதிவாகவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28678 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27687ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 164 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கோவை மண்டலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.