கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள வீரபாண்டிபிரிவு பகுதியைச் சேர்ந்தவர்  ராமசாமி. இவர் பிரஸ் காலனி பகுதியில் உள்ள தம்பு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் அபிநயா (16) மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் ஹேமவர்சினி (14) ஆகிய தனது பேத்திகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து செல்ல வந்துள்ளார். பள்ளியில் இருந்து வந்த இருவரையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்துடன் 3 பேரும் பேருந்தின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.


இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்துள்ள 3 பேரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, மேல் சிகிச்சைகாக மூவரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே  ராமசாமி மற்றும் ஹேமவர்சினி ஆகியோர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அபிநயா அவசர  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார். இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பள்ளி முன்பு மாணவர்கள் சாலையில் கடக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் பள்ளி நிர்வாகம் சார்பில் செய்து தரப்படவில்லை எனவும், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அதி வேகமாக வரும் வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தொழில் கூடங்கள், பள்ளிகள் முன்பு வேகமாக வரும் கனரக வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத் தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதேபோல தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்மணி பிரியா, இன்று காலை கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனது தோழி பேச்சியம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் பணி நிமித்தமாக காந்திபுரம் சென்று விட்டு தனது நண்பரான கோவை ஆயுதப்படை காவல் துறையில் பணியாற்றும் காவலர் ராஜா என்பவருடன், இன்று மாலை இருசக்கர வாகனத்தில் நீலாம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். நீலாம்பூர் வந்த போது  அவர்கள் வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில், இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது கோவையில் இருந்து நீலாம்பூர் சென்ற கனரக லாரி அவர்கள் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் ஒரே நாளில் நான்கு பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண