கோவையில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement


கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மரங்கள், செடிகள் குறித்தும், மர இனங்களை பெருக்குவது குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் செடிகள் மற்றும் மரங்களை பூச்சிகள் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது, பூச்சிகளை கண்டறிந்து ஆய்வு செய்வது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மரங்களின் தன்மையை கண்டறியும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி நான்காம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரி பார்ப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் தேர்வு எழுதியவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ்கள் சரி பார்த்த போது பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் 4 பேர் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் ஹரியானா மாநிலத்தை சார்ந்த அமித்குமார் (30), அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) என்பதும் தெரியவந்தது.


இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குநர் குன்கிகண்ணன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண