கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022 ம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோவையில் அரபிக் கல்லூரிகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்ட முயற்சித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர். அரபி கல்லூரிகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவு திரட்டப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கின்  அடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. இது தவிர சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது.


இந்த நிலையில் என்.ஐ.ஏ சோதனையில் ஆறு லேப்டாப், 25 மொபைல் போன்கள், 34 சிம் கார்டுகள், 6 எஸ்.டி கார்டுகள் மற்றும் 3 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அடிப்படை வாத சிந்தனைகளை விதைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியதாக நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அடிப்படைவாத சிந்தனைகளுடன் இருப்பவர்கள் என்பதும், சமூக வலைதளங்கள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவு திரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக அரபிக் கல்லூரியில் படித்த மாணவர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமரி கோவைய பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன், குனியமுத்தூர் கேலக்ஸி கார்டனை சேர்ந்த இஷ்ரத், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோயம்புத்தூர் அரபிக் கல்லூரியின் ஆசிரியராக முகமது உசேனும், அரபி பள்ளியின் ஆசிரியராக இஸ்லாத்தும் இருந்து வருகின்றனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக சமூக வலைதளங்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் ஆதரவு திரட்டி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.


உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.