வால்பாறையில் நிலச்சரிவு அபாயம் உள்ள 305 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு இடமாற்றம்

பருவமழை சமயங்களில் ஏற்பட கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும் மிக மிக கனமழை பெய்யும் எனவும், 20 செ.மீ.க்கு மேல் மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Continues below advertisement

இதனிடையே கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை, பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

நிவாரண முகாம்கள்

பருவமழை சமயங்களில் ஏற்பட கூடிய இயற்கை இடர்பாடுகளை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வால்பாறையில் மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், ஆற்றாங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வால்பாறை நகராட்சி, காமராஜ் நகரை சேர்ந்த 15 வீடுகளில் வசிப்பவர்களை, வால்பாறை தூய இருதய மேல்நிலைப் பள்ளியிலும், கக்கன் காலனி, சிலோன் காலனி, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 170 வீடுகளில் வசிப்பவர்களை, அர மேல்நிலைப்பள்ளியிலும், விளையாட்டு பூங்கா மைதானம் கீழ் புறத்தை சேர்ந்த 25 வீடுகளில் வசிப்பவர்களை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், சோலையார் டேம் பெரியார் நகரை சேர்ந்த 50 வீடுகளில் வசிப்பவர்களை ஊராட்சி ஒன்று நடுநிலைப்பள்ளி மற்றும் உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், ரொட்டிகடை குவாரி பகுதியை சேர்ந்த 20 வீடுகளில் வசிப்பவர்களை லோயர் பாரளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், டோபி காலனி பகுதியை சேர்ந்த 25 வீடுகளில் வசிப்பவர்களை நகராட்சி சமுதாய நலக்கூடத்திலும் தங்க வைக்க நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, வால்பாறை 23 வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் 2000 மணல் மூட்டைகள் கொண்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் 30 பேர் முகாமிட்டுள்ளனர். வால்பாறை பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு. தீயணைப்பு துறையினரையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை ஏற்பட்டு நிலச்சரிவு ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

Continues below advertisement