கோவை அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் போது, பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ராமசாமி என்பவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் இத்தாலியன் ஃபர்னிச்சர் என்ற நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணிகள் இன்று மாலை நடைபெற்றது. இந்த பணிகளில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் எடுத்து செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. விளம்பர பலகைகள் பொருத்தும் பணிகளில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அப்போது திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இதில் பலத்த காற்று காரணமாக விளம்பர பலகை பொருத்த அமைக்கப்பட்டு இருந்த சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்களை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அருண்குமார், சண்முகசுந்தரம் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காண்ட்ராக்டர் பழனிசாமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதாகவும், இதனால் பலத்த காற்று வீசிய போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். விளம்பர பலகை பொருத்தும் பணிகளில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் சாரம் சரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்