வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தற்போது வரை 20 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேசமயம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் தொடர்பான விபரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 



நிவேதா சேனாதிபதி


இந்நிலையில் திமுக வெளியிட்டுள்ள எட்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் கோவை மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் கோவை மாநகராட்சியில் முதல் கட்டமாக 19 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வயது மாணவிக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.


வடவள்ளி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் நிவேதா சேனாதிபதிக்கு கோவை மாநகராட்சியில்  97 வது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார். கோவையில் இளங்கலை இயற்பியல் படிப்பு முடித்த நிவேதா, தற்போது பஞ்சாப்பில் எம்.ஏ சைக்காலஜி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நிவேதா வென்றால் மேயராகும் வாய்ப்பிருப்பதாக கட்சி நிர்வாகிகளிடையே பேச்சு நிலவுகிறது.


திமுகவில் மீனா ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோருடன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதால் நிவேதாவும் மேயர் பதவிக்கான போட்டியில் இணைந்துள்ளார்.


 



நிவேதா சேனாதிபதி


இதே போல் முன்னாள் கவுன்சிலராக இருந்த கார்த்திக் செல்வராஜுக்கு 72வது வார்டில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் திமுக சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளுக்கும், கூடலூர் நகராட்சியில் 27 வார்டில் 25 வார்டுகளுக்கும், காரமடை நகராட்சியில் 27 வார்டில் 22 வார்டுகளுக்கும், மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகளுக்கும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 27 வார்டில் 26 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


இதே போல் தொண்டாமுத்தூர், வேடபட்டி, தாளியூர், பேரூர், தென்கரை, பூளுவப்பட்டி, ஆலந்துறை, வீரபாண்டி, சிறுமுகை, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், திருமலையாம்பாளையம், எட்டிமடை, வெள்ளலூர், செட்டிபாளையம், சூலூர், பள்ளபாளையம், இருகூர், கண்ணம்பாளையம், மோப்பிரிபாளையம் ஆகிய 20 பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.


கூட்டணி கட்சியினருக்கு மாநகராட்சியில் குறைந்த இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ள திமுக, பேரூராட்சிகளிலும் முழுமையாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு சொற்ப இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுமா என்கிற எதிர்ப்பார்ப்பு கூட்டணி கட்சியினரிடையே எழுந்துள்ளது. அதே சமயம் சில கட்சிகள் பல்வேறு இடங்களில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன.