வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடுவது குறித்த தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. அதிமுக 93 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேசமயம் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் தொடர்பான விபரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 19 வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் அதிகளவிலான திமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதும், கூட்டணிக் கட்சிகளுக்கு சொற்ப அளவிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் தெரியவருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அடைந்த கூட்டணி கட்சிகள் பல்வேறு இடங்களில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. இந்நிலையில் கண்ணம்பாளையம் பேரூராட்சியில் திமுகவிற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளன.
கண்ணம்பாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளன. அக்கூட்டணிக்கு கண்ணம்பாளையம் மக்கள் சேவை முன்னணி எனப் பெயரிட்டுள்ளது. திமுகவிற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் தனி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனர்.
இது குறித்து அக்கட்சியினரிடம் கேட்டபோது, “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாரை கதி கலங்க வைத்தவர்கள் கண்ணம்பாளையம் தியாகிகள். அவர்களின் உண்மையான வாரிசுகளாக கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்றத் தேர்தலில் கமிஷன் வாங்குபவர்களை களை எடுக்கவும், ஊழல் செய்பவர்களை தோலுரிக்கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.
இப்பேரூராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக போதிய இடங்களை ஒதுக்கவில்லை. சில கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடங்களை கூட தர முன்வரவில்லை. இப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவான வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது. அதனால் இடதுசாரிகள் மற்றும் கொமதேக இணைந்து மக்கள் சேவை முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். கொமதேக 15 வார்டுகளிலும் போட்டியிடாமல், இடதுசாரிகளுக்கு ஆதரவு அளித்துள்ளது” எனத் தெரிவித்தனர்.