கோவையில் 16 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Continues below advertisement

கோவை இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அடிக்கடி யாரோ ஒருவருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தாய் கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் அந்த சிறுமி வீட்டில் இருந்து திடீரென வெளியேறி காணாமல் போனார்.

மகளை காணவில்லை என அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

Continues below advertisement

மேலும், சிறுமி எந்த வழியாக சென்றார் என்பதை கண்டறிய காந்திபுரம் 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மாணவி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பேருந்து நிலையம் அருகே இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், பேருந்து நிலையம் பகுதியில் நின்றுகொண்டிருந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, விசாரணைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.