கோவையில் தனியார் அப்பார்மெண்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.


கோவை வடவள்ளி உள்ள சான்ஸ்ரே என்ற அபார்மெண்டில் வசித்து வருபவர்  பிரதீஷ். இவரது மனைவி சுகன்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 11 வயது மகன் லஷ்மன், அப்பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லஷ்மன் நேற்று இரவு அபார்மெண்டில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பூங்காவிற்குள் பதித்து வைத்திருக்கும் மின்சார ஒயரினை தெரியாமல் மிதித்துள்ளான். அப்போது சிறுவன் லஷ்மன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்துள்ளான். 


இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் சிறுவன் லஷ்மனை மீட்டு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் லஷ்மன், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து லஷ்மன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து லஷ்மனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 




காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அபார்மெண்டில் உள்ள பூங்காவில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட மின்சார ஒயரை அந்த அபார்மெண்டில் உள்ள பூங்கா பராமரிப்பாளர் வெளியே எடுத்ததாகவும், மீண்டும் அந்த ஒயரை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த லஷ்மன் எதிர்பாராத விதமாக மின்சார ஒயரை மிதித்ததால் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.  


இது குறித்து சிறுவன் லஷ்மனின் தாயார் சுகன்யா கூறுகையில், “அப்பார்மெண்ட் பூங்காவில் லஷ்மன் ஷாக் அடித்து இறந்து விட்டான். இதற்கு பராமரிப்பு சரியில்லாததே காரணம். அபார்மெண்ட் அசோசியேசன் தலையீடு காரணமாக காவல் துறையினர் தற்போது வரை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளனர். உடனடியாக வழக்குப் பதிவு செய்து, லஷ்மன் உடலை எங்களிடம் கொடுங்கள்” எனத் தெரிவித்தார். பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண