சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா:


உலக அளவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் திரிபின் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் என கூறப்படும், BF7 சீனாவில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும், புதிய வகை கொரோனா வைரசால் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உருமாறிய கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் , சென்னை தலைமை செயலகத்தில் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.


மக்கள் அச்சப்பட வேண்டாம்:


இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதோடு, மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில்  வெளிநாடுகளில் இருந்து வரும்  பயணிகளை பரிசோதனை செய்ய அரசு பரிந்துரைத்துள்ளது. BA5 தொற்று கடந்த ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், தமிழகத்தில் கண்டறியப்பட்ட நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று XBB வகையை சேர்ந்தது ஆகும்.


தனிமனித இடைவெளியை பின்பற்றுக:


அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு  உரிய படுக்கை வசதிகள் போதுமான அளவில் உள்ளது. மருந்துகள், பரிசோதனை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவை போதுமான அளவில் உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால்  அருகில் உள்ள மருத்துவமனையை  அணுகி சிகிச்சை பெற வேண்டும். யாருக்கேனும் தொற்று உறுதியானால் அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு:


முதலமைச்சர் உடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக, தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதம் கடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் 10 விதமாக உருமாற்றம் பெற்றுள்ளது என்றார்.



கண்காணிப்பு தீவிரம்:


கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.