யானைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. தற்போது இருக்கும் உயிரினங்களிலே மிகவும் பலம் வாய்ந்த, பெரிய உயிரினும் யானைதான். அதன் உருவம் பயமுறுத்தினாலும், யானைகளின் சின்ன சின்ன செயல்கள் குறும்புகள், அனைத்தும் மக்களின் மனதை கவரும் மாற்று கருத்து இல்லை. ஆனால் யானைகளுக்கு இந்த பிரம்மாண்ட தோற்றத்தைக் கொடுக்கும் தந்தத்தின் காரணமாக கொல்லப்பட்டு வருவது என்பது சோகமான விஷயமும் கூட.



 

உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 1160 என்ற நிலையில் உள்ளது . எனவே யானைகள் தினத்தில் யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டி உள்ளது.

 



இப்படி ஒரு புறம் யானைகள் அழிந்து வந்தாலும் மறுபடியும் யானைகளுக்கு மறுவாழ்வு மையங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் யானைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் தற்போது இரண்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆறு வயதான பிரகதி மற்றும் நான்கு வயதான ரோகிணி ஆகிய இரண்டு யானைகள்தான் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

இரண்டு யானைகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தண்ணீரில்  விளையாடும் காட்சிகளை காண பொதுமக்கள் குவிவார்கள். அதிலும் குட்டி யானை ரோகிணியின் குறும்பு செயல்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.



 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகளை பராமரிப்பது கடினமான செயல் என்பதில் மாற்று கருத்து இல்லை, சில ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த  அசோக் என்ற ஆண் யானை, பிறந்த மூன்று மாதத்தில் கொண்டுவரப்பட்ட அசோக், எட்டு வயது வந்ததும் வனவிலங்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது. பொதுவாக யானைகள் 8 வயதில் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் மதம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அவற்றை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் யானைகள் முகாமிற்கு அனுப்பிவிடுவார்கள்.



 

அசோக் சென்ற பிறகு சுட்டி யானையாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த ரோகிணி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. 2016-ஆம் ஆண்டு  சத்தியமங்கலம் காட்டில் தாயினால் கைவிடப்பட்ட யானையாகும். ரோகிணி மனிதர்களிடம் எளிமையாக நெருங்கிப் பழகும்தன்மை கொண்ட யானை. அறிவுக் கூர்மையும் அதிகம், ரோகிணி யானை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து வருகிறது.  யானையை பராமரிக்கும் பராமரிப்பாளர்கள் தொடர்ந்து அவற்றை கண்காணித்து நெருங்கி பழகி, தங்களது பிள்ளைகள் போல வளர்த்து வருகின்றனர். ரோகிணி செய்யும் சுட்டி செயல்கள்தான், பார்வையாளர்களுக்கு கண்கவர் ட்ரீட். உருவத்தில் பெரியவை என்றாலும் அவைகளும் குழந்தைகள்தானே....