உலகிலேயே மிகச்சிறந்த தானங்களில் ஒன்றாக ரத்த தானம் இருந்து வருகிறது. ஒருவருடைய உயிரை நாம் காப்பாற்றும் உன்னதமாக ரத்த தானம் திகழ்ந்து வருகிறது. ரத்த தானம் குறித்து அரசும், பல்வேறு தனியார் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், ரத்த தானம் கொடுப்பதற்கு இப்பொழுதும் தயக்கம் இருக்கத்தான் செய்கின்றன. ரத்தத்தை தானமாக பெற்றவர்கள் கூட, ரத்த தானம் கொடுப்பதற்கு யோசிக்கும் நிலைமை இன்றும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், உலக ரத்த தானம் தினம் ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகமான மக்களை ரத்த தானம் செய்ய வலியுறுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.


உலக ரத்த தானம் தினம்  



ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14ஆம் தேதி உலக ரத்த தானம் தினம் கொண்டாடப்படுகிறது. உலக ரத்த தானம் தினம் 2005 - ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து, ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


ரத்த தானம் செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன ?


பொதுவாக ரத்த தானம் செய்வது, ரத்தத்தை பெறுபவர்களுக்கு மட்டும் இல்லாமல் கொடுப்பவர்களுக்கும் நன்மை செய்வதாக ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ரத்த தானம் கொடுப்பது பிறருக்கு மட்டுமில்லாமல் கொடுக்கும் நமக்கும் நன்மை தருவதால் எந்தவித அச்சமும் இன்றி ரத்தம் தானம் கொடுக்க முன் வரலாம் என்பதே , அறிவியலாளர்களின் கருத்தாக உள்ளது.


ரத்ததானம் கொடுத்தால் மன அழுத்தம் குறையும், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதவும், ரத்த தானம் செய்யும்போது, அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன் செய்யப்படுகிறது. பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கூறுகின்றனர். அதேபோன்று ரத்த தானம் கொடுப்பதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது அறிவியலாளர்களின் கருத்தாக உள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 


 ரத்தம் கொடுப்பதில் செஞ்சுரியை கடந்தவர்



அருண் கோகுல்தாஸ் என்பவர் தனது 18 வயதிலிருந்து 80 வயது வரை தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதாக தெரிவிக்கிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்திருப்பதாகவும், ரத்த தானம் செய்த தமக்கு இதுவரை எந்தவித பக்க விளைவுகளோ எந்த வித பிரச்சனையும் வந்தது இல்லை எனவும் விவரிக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் நம்மிடம் தெரிவித்ததாவது: 15 வயது இருக்கும் பொழுது தனக்கு ரத்த தானம் செய்ய வேண்டும் என ஆசை வந்ததாகவும், அதற்கு அனுமதி இல்லாததால், தனது 18-வது பிறந்தநாளில் முதல்முறையாக ரத்த தானம் செய்ததாக தெரிவிக்கிறார்.


 




வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை ரத்த தானம் செய்து வந்ததாகவும், 1989 ஆம் ஆண்டு 100 முறை ரத்த தானம் செய்ததற்காக அப்பொழுதே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததாகவும் கூறுகிறார். நாம் தொடர்ந்து ரத்த தானம் கொடுத்து வருவதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார் அருண் கோகுல் தாஸ். நாம் ரத்தம் கொடுப்பதால் உயிர் காக்கப்படுவதாகவும், எனவே அனைவரும் தாமாக முன்வந்து ரத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.