Chennai Metro Rail : சோழிங்கநல்லூர் - சிப்காட் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் சாலை வழியான பயணத்திற்கு மாற்றாக மெட்டோ ரயிலில் பயணிப்பதை தேர்வு செய்கின்றனர். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு சுமார் ரூ.1,134 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது. மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதன் திட்ட மதிப்பு ரூ.61,843 கோடி ஆகும்.
சோழிங்கநல்லூர் டூ சிப்காட்
இந்நிலையில், ஓ.எம்.ஆர் பகுதியில், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை 10 கிலோ மீட்டர் பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் என்று கூறப்படுகிறது. மாதாவரம் முதல் சிறுசேரி சிப்கார்ட் வரை செல்லும் மெட்ரோ ரயில் பாதையில், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உள்ள 10 கிலோ மீட்டரும் உள்ளடங்கும்.
இதில் நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி, சிறுசேரி, சிறுசேரி சிப்காட், காந்தி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலையங்கள் அமைக்கப்படும்.
தொடங்கிய பணி
அதன்படி, சோழிங்கநல்லூர் -சிப்காட் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பழைய மாமல்லபுரம் சாலையில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் நேரு நகர்- சோழிங்கநல்லூர் மற்றும் சோழிங்கநல்லூர் சிப்காட் இடைய 2 தனித்தனி ஒப்பந்தங்களாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேரு நகர்-சிப்காட் இடைய 19 ரயில் நிலைங்களுடன் உயர்த்ப்பட்ட பாதையாக அமைகிறது.
ஏற்கனவே நேருநகர்-சோரீங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது சோழிங்கநல்லூர்- சிப்காட் இடையே பணிகள் தற்போது தொடங்கி நடந்த வருகிறது.
இதுகுறித்து சிஎம்ஆர்எல் அதிகாரிகள் கூறுகையில், ”பூந்தமல்லி-போரூர், மாதவரம்-ரெட்டேரி உள்ளிட்டவை 2026-ஆம் ஆண்டுக்குள் முதலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று தற்போது சோழிங்கநல்லூர்- சிப்காட் இடையே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடித்துவிட்டதால் இன்னும் மூன்றே ஆண்டுகளில் பணிகள் முடிந்து 2027ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்" என்றார்.